April 18, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

வெந்தயத்தில் இருப்பது என்ன?

19 min read

வெந்தயம், Fenugreek, வெண்தயம், குளுமை

நீரிழிவுக்காரர்களுக்கு மிக நல்லது.

அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவக் காத்திருக்கிற அற்புத மருந்து வெந்தயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். சாம்பாரோ, வத்தக்குழம்போ, புளிக்குழம்போ… எதுவானாலும், தாளிக்கும்போது சிறிது வெந்தயம் தூக்கலாகச் சேர்த்துப் பாருங்கள். முழுதாக வெந்தயம் சாப்பிடப் பிடிக்காதவர்கள், கொதித்து இறக்கும் முன் வெந்தயப் பொடியைத் தூவிப் பாருங்கள்… உங்கள் சமையலறை வாசம், தெருக்கோடி வரை வீசும். மணத்தில் மட்டுமின்றி, குணத்திலும் மிகச் சிறந்தது வெந்தயம்!

வெந்தயத்தில் என்ன இருக்கிறது? (100 கிராமில்)

புரதம் 26.2 கிராம்
கொழுப்பு 5.8 கிராம்
நார்ச்சத்து 7.2 கிராம்
ஆற்றல் 333 கிலோ கலோரி

ஜீரணமாகாத மாவுச்சத்தைதான் நாம் நார்ச்சத்து என்கிறோம். அந்த நார்ச்சத்து வெந்தயத்தில் மிக அதிகம். தவிர பெக்டினும், பிசினும்கூட அதிகம். 100 கிராம் வெந்தயத்தில் 40 சதவிகிதம் பிசின் உள்ளது. அபரிமிதமான புரதமும், நார்ச்சத்தும் கொண்ட வெந்தயத்தின் மகிமை நமக்குத்தான் முழுமையாகத் தெரிவதில்லை. அதனால்தான், அதை சமையலில் ஏனோதானோவென, அதுவும் கொஞ்சமாகத்தான் உபயோகிக்கிறோம். வெந்தயத்தின் மகத்துவம் தெரிந்தால், சாப்பிடுகிற உணவிலிருந்து வெந்தயத்தை ஒதுக்கித் தள்ளும் பழக்கத்தை மாற்றிக் கொள்வீர்கள்!
வெந்தயம் நீரிழிவுக்காரர்களுக்கு மிக நல்லது என்பது தெரியும். ஏன் நல்லது எனத் தெரியுமா? சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 – 110 வரை இருக்க லாம். நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும். அதிக கலோரி உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது.

அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது. தினமும் இரவில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதே போல புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கும்.

வெந்தயத்தில் உள்ள பிசின், குடலுக்குள் போய், தண்ணீரை எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பான்ஜ் போல விரிவடையும். அது உணவுக்குழாயில் உள்ள நச்சுப்பொருள்களை எல்லாம் வெளியேற்றிவிடும். எனவே, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. வெந்தயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். அது ‘அசிடிட்டி’ எனப்படுகிற அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும். உதாரணத்துக்கு எலுமிச்சை ஜூஸ் குடிக்கிறோம் என்றால், அதிலுள்ள அமிலத்தன்மையை ஈடுகட்ட, மோர் குடிக்க வேண்டும்.

உணவின் மூலம் உடலுக்குள் சேர்கிற அமில – காரத் தன்மைகளை பேலன்ஸ் செய்து சரியான அளவில் வைக்கக்கூடியது வெந்தயம். செரிமானம் சரியில்லாத நேரங்களில் வெந்தயம் கலந்த மோர் குடித்தால், அமிலத் தன்மை சரியாகி, செரிமானம் சீராகும். வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி இருந்தால் 10 கிராம் வெந்தயத்தை, மோரில் கலந்து சாப்பிட, உடனே குணம் தெரியும். வெந்தயம் வயிற்றுக்குள் போய், ஊறி, கெட்ட கிருமிகளை உறிஞ்சி, இன்ஃபெக்ஷனை சரியாக்கும். உடல் சூட்டினால் உண்டாகும் வலியையும் விரட்டும்.

வயிற்றில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருந்தாலும் வெந்தயம் வெளியேற்றி விடும். அமீபியாசிஸ் மாதிரியான நோய்களுக்கும் வெந்தயம் பிரமாதமான மருந்து. தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். சிறுநீரகங்கள் சீராக இயங்கும். வாயுத் தொந்தரவு நீங்கும். எலும்புகள் பலமாகும். சருமம் அழகு பெறும். வெந்தயத்தை வறுத்துப் பொடித்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும். மாதவிலக்கு நாள்களில் உண்டாகிற கோளாறுகளுக்கும் வெந்தயம் மருந்து. உடல் சூட்டைத் தணித்து, கர்ப்பப் பையைப் பலப்படுத்தும். மூல நோய்க்கும் நிவாரணம் தரும்.
வெந்தயம் ஸ்பெஷல் ரெசிபி.

www.thamizhil.com

வெந்தயக் கீரை – சேப்பங்கிழங்கு குழம்பு
என்னென்ன தேவை?
வெந்தயக் கீரை – 1 கட்டு, சேப்பங்கிழங்கு – 100 கிராம், வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி – பூண்டு விழுது – சிறிது, குழம்பு மிளகாய் தூள் – சிறிது, மஞ்சள் தூள் – கால் சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவைக்கு, கறிவேப்பிலை,
கொத்தமல்லி – சிறிது. அரைப்பதற்கு: தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், சோம்பு, கசகசா – தலா கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – அரை டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
சேப்பங்கிழங்கை தோல் மட்டும் நீக்கி, வேக வைக்காமல், சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெந்தயக் கீரையை அலசி, நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சேப்பங்கிழங்கு சேர்த்து வதக்கவும். பிறகு வெந்தயக் கீரையும் சேர்த்து வதக்கி, உப்பு, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும். அல்லது நன்கு கொதிக்கும் போது, குக்கரில் வெயிட் போட்டு, குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

வெந்தய மிக்சர் என்னென்ன தேவை?
வேக வைத்து வடித்த வெந்தயம் – 1 கப், கடலை மாவு – கால் கப், சோம்பு – தாளிப்பதற்கு, கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 1 டீஸ்பூன்.

www.thamizhil.com
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதிலேயே கடலை மாவையும் சேர்த்து, லேசாக வறுக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து வறுக்கவும். வேக வைத்து, தண்ணீரை நன்கு வடித்த வெந்தயத்தை அதில் சேர்த்து, குறைந்த தணலில் வைத்து வதக்கவும். வெந்த வெந்தயத்தில் உள்ள தண்ணீரே அது வதங்கப் போதுமானதாக இருக்கும். கலவை நன்கு உதிர் உதிராக வறும் வரை வதக்கி, ஆறியதும், காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி வைக்கவும். இதை தினம் 1 டீஸ்பூன் வெறுமனே சாப்பிடலாம் அல்லது தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

வெந்தய தோசை என்னென்ன தேவை?
சிகப்பரிசி – 2 கப், கருப்பு உளுந்து – கால் கப், பச்சைப் பயறு – கால் கப், வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் 4 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்து, உப்பு சேர்த்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசையாக வார்க்கவும்.

 

Leave a Reply

Your email address will not be published.