ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க?
18 min readஅனைவருக்கும் தூங்குவதென்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாள் முழுவதும் உடம்பு நோக வேலை பார்த்த பின், மெத்தைக்குள் நுழைந்து இழுத்து போர்த்தி தூங்குவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது? நாம் அனைவரும் அன்றாடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் தூக்கம். அத்தகைய தூக்கத்தை மேற்கொண்டால், அது உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
அதுவும் போதிய நேரம் தூங்குவதற்கு தான் நம்மை பலரும் அறிவுறுத்துகின்றனர். போதிய தூக்கம் இல்லையென்றால் ஒருவருக்கு பல வகையில் உடல்நல கோளாறுகள் ஏற்படும். இதை பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதனால் தான் இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையை குணப்படுத்த பல வகையான சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் பாட்டி வைத்தியங்களை கையாளுகின்றனர்.
ஆனால் இதற்கு எதிர்மறையாக நடந்தால் என்ன செய்வது? என்ன புரியவில்லையா? அதிக நேரம் தூங்குவதால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா? கேட்டால், சொகுசாக, சந்தோஷமாக இருக்கும் என்று பலர் சொல்வார்கள். ஏன் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என்றும் கேட்கலாம்? கண்டிப்பாக கேட்க வேண்டும். ஏனெனில், நீண்ட நேரம் தூங்குவதால் கண்டிப்பாக பிரச்சனைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் சில பிரச்சனைகளை கீழே பார்க்கலாம். அதுமட்டுமின்றி, அத்தகைய பழக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகளையும் பார்ப்போம்.
சர்க்கரை நோய்
தினமும் இரவு அதிக நேரம் தூங்குவதால் அல்லது போதிய தூக்கம் கிடைக்காவிட்டால், சர்க்கரை நோயின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உடல் பருமன்
அதிக நேரம் தூங்குவதால் உடல் எடையானது அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளது. தினமும் 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 9-10 மணி நேரம் தூங்குபவர்களில், ஆறு வருட காலத்தில் 21% மக்களின் எடை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
தலைவலி
அடிக்கடி தலைவலி வரும் நபர்கள், வார இறுதி அல்லது விடுமுறைகளில் அதிக நேரம் தூங்க முற்பட்டால், அதனால் தலை வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பக்கவிளைவு மூளைகளில் உள்ள நரம்புக்கடத்தியை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செரோடோனினும் அடங்கும்.
முதுகு வலி
முன்பெல்லாம் முதுகு வலி என்று மருத்துவர்களிடம் சென்றால், படுக்கையில் நேராக படுக்க அறிவுறுத்துவார்கள். ஆனால் அதையும் தாண்டி அதிகமாக தூங்குவதாலும் முதுகு வலி ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் முதுகு வலி உள்ளவர்களை அதிக நேரம் தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மன அழுத்தம்
அதிகமாக தூங்குவதை விட, தூக்கமின்மை தான் மன அழுத்தத்துடன் அதிக தொடர்பில் இருந்தாலும், மன அழுத்தம் உள்ளவர்களில் தோராயமாக 15% நபர்கள் அதிகமாக தூங்குகிறார்கள். இதனால் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே எந்த ஒரு நோய்க்கும் போதிய தூக்கம் தான் நிவாரணியாக விளங்கும்.
இதய நோய்
செவிலியர் ஆரோக்கிய ஆய்வு, கிட்டத்தட்ட 72,000 பெண்களை ஆய்வில் பயன்படுத்தியது. அந்த ஆய்வின் படி 38% பெண்கள் தினமும் 11 மணி நேரம் தூங்குகிறார்கள் என்றும், தினமும் 8 மணி நேரம் தூங்கும் பெண்களை வி,ட இவர்களுக்கு தான் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் கூறுகிறது.
மரணம்
தினமும் இரவு ஒன்பது அல்லது அதற்கு மேலாக தூங்குபவர்கள், 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, விரைவிலேயே இறக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.
வேகமாக விழித்திட முடிவு செய்யவும்
அதிக நேரம் தூங்க விரும்பினால், அதிக நேரம் படுக்கையில் இருக்க விரும்புகிறோம் என்று அர்த்தம். இதை விட சுலபமாக இதை சொல்ல முடியாது. பல நேரங்களில் அதிக நேரம் தூங்குவது என்பது தப்பிக்கும் வழிமுறையாகும். ஒரு வகையில் நிஜத்தை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் கையாளும் வழி தான் இது. ஆகவே அதிக நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைபட்டால், எமனை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தால், நீண்ட நேர தூக்கத்தில் இருந்து விடுபடலாம்.
அதிக நேரம் தூங்குவதை தடுப்பதில் ஆர்வமூட்டவும்
இந்த ஆர்வத்தை வரவழைக்க பல வழிகள் இருந்தாலும், சுலபமான ஒரு வழியை பார்க்கலாமா… 1. ஏன் அதிக நேரம் தூங்க கூடாது என்பதற்கு ஆணித்தனமான ஒரு காரணத்தை முடிவு செய்யுங்கள். அதில் தெளிவாக இருங்கள். 2. அதனை உறுதியான மற்றும் நேர்மறையான கூற்றாக எழுத வேண்டும். அப்படி எழுதும் போது நிகழ்கால நடையில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு, “நான் தினமும் உற்சாகத்துடன் காலையில் 7 மணிக்கு எழுந்திருப்பதால், என்னை நினைத்து மிகவும் சந்தோஷமும் பெருமையும் அடைகிறேன்.” 3. அதனை எழுதி, அடிக்கடி வாசித்தும் திரும்ப திரும்ப எழுதவும் செய்ய வேண்டும். குறைந்தது படுக்கும் முன் அதனை ஒரு முறை படிப்பது நல்லது.
தூக்கத்தை பற்றிய அபிப்பிராயத்தை மாற்றவும்
தூக்கம் என்பது வாழ்வதற்காக மட்டும் தான் என்ற எண்ணம் எப்போதும் மனதில் ஓட வேண்டும். முக்கியமாக சுகத்திற்காக தான் தூக்கம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.
ஒரே நேரத்தை எப்போதும் கடைபிடிக்கவும்
தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும், விழிக்கவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் தூங்கினாலும், குறைந்தது ஒரே நேரத்தில் எழுந்திருக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.
நன்றாக தூங்கவும்
நல்ல தரமுள்ள ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு பல எளிய முறைகள் உள்ளன. அப்படி தூங்குவதால், உடலுக்கு தேவையான ஆற்றலானது கிடைத்து விடும். அதற்கு குறைந்தது நாம் செய்ய வேண்டியவை: – ஒரே மாதிரியான தூக்க ஒழுங்கு முறையை பின்பற்ற வேண்டும். – மதிய நேரத்தில் காஃப்பைன் உள்ள உணவை தவிர்க்கவும். – இரவு நேரத்தில் புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும். – கண்களை சூரிய ஒளியில் குறைந்தது 2 மணி நேரமாவது வெளிக்காட்ட வேண்டும்.
படிப்படியாக அதிக தூக்கத்தை குறைக்கவும்
ஒரு வாரத்தில் 30-60 நிமிட தூக்கத்தை குறைக்க வேண்டும். முதலில் அது கஷ்டமாக தான் இருக்கும். மேலும் இந்த புதிய தூக்க ஒழுங்கு முறையுடன் ஒத்துப்போவதற்கு 7-10 நாட்கள் ஆகும். முக்கியமாக இதில் குறிப்பிட்ட அளவையே கடைபிடிக்க வேண்டும். அதிகமாக தூக்கத்தை தொலைக்க வேண்டாம். தினமும் இரவு 6-8 மணி நேரங்கள் தூங்க வேண்டும். இதுப்போக தினமும் 20-40 நிமிடங்கள் வரை குட்டி தூக்கமும் போடலாம்.
Source: http://nanbantamil.blogspot.in/2013/07/side-effects-of-oversleeping.html