தேமலுக்கு ஒரு நிரந்தர தீர்வு!
8 min readநமது தோலில் நிறமாற்றம் உண்டாவதை பொதுவாக தேமல் என்கிறோம்.இதற்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அலோபதி மருத்துவம் இதற்கு பல்வேறு தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் செலவு பிடித்தவை. தேமலை போக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு தீர்வுகள் இதற்கு முன் வைக்கப் பட்டிருக்கிறது. இவை எல்லாம் கைவைத்தியம், பாட்டி வைத்தியம் என முந்தைய தலைமுறையோடு பெயரில் முடங்கிப் போய் விட்டது. இதனால் நம்மில் பலருக்கு இதன் மகத்துவமே தெரியாமல் போய்விட்டது.
இந்த தேமலை தமிழ் வைத்தியத்தில் “மங்கு” என அழைக்கின்றனர். இதனை போக்கிட ஒரு எளிய மருத்துவ குறிப்பு தேரையரின் பாடலில் காணக் கிடைக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு…
கொள்ளவே யரிதாரப் பளிங்கு மாகுங்
குறையாமல் பலமரைதான் நிறையோர் கட்டி
உள்ளவே நற்கோவை ரசத்தை வாங்கி
உறவாக யிழைத்து வழித்தெடுத்துக் கொண்டு
மெள்ளவே ஐந்திருநாள் யிருபோதுந் தான்
விளங்கவே அடுத்தடுத்துப் பூசும்போது
துள்ளவே திருமுகத்தில் படரும் வங்கும்
தொந்தித்து நில்லரிது துலைந்து போமே.
இந்தப் பாடல் தேரையரின் மருத்துவ காவியம் என்கிற நூலில் இருந்து எடுக்கப் பட்டது. இதன் படி சருமத்தில் உண்டாகும் தேமல், தழும்புகள், அடையாளங்கள் நீங்கிட இந்த குறிப்பைத் தருகிறார்.
அரிதாரம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு பொருள். பளிங்கு போல தோற்றமளிக்கும் இது கட்டியாகவும் தூளாகவும் கிடைக்கும். இதில் கட்டியான அரிதாரம் ஒரு அரைப் பலம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் கோவைக்காயின் சாறு விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை ஒரு நாளைக்கு இரண்டு தடவை (காலை, மாலை) என பத்து நாட்களுக்கு பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பூசி வர அவை அனைத்தும் மறைந்து சருமம் அழகாயிருக்கும் என்கிறார்.
பாதிப்புள்ளவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்… தேவையுள்ளோருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.