உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை
8 min readதிராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது.
உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.
சத்துக்கள் – பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.
இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப் பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இல்லாமல் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
உலர் திராட்சையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றைக் கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டு மொத்த ஆற்றல் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில், அதிக அளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், ரத்த குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.
உலர் திராட்சையில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இரும்பு, தாமிரச் சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த செல்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருப்பதால், ரத்தசோகைக்கான வாய்ப்பு குறைகிறது.
தேவை: திராட்சையை உலரவைக்க ,அதுவும் பொன் நிறமாக உள்ள திராட்சை வகைகளை உலரவைக்கும்போது சல்ஃபர் டைஆக்சைட் போன்ற சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இயற்கை முறையில் உலரவைக்கப்பட்ட திராட்சையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. தினமும் 5 – 6 திராட்சை எடுத்துக்கொள்ளலாம்.