காற்றை சுத்த படுத்தும் அத்தி
10 min readகாட்டு அத்திமரம் நல்ல பயனுள்ள மரமாகவும் அமைந்து இருக்கின்றது. வீட்டில் வைத்தால் இந்த மரம் அசுத்தமான காற்றை உறிஞ்சிக் கொண்டு அதைச் சுத்தம் செய்து மனிதனுக்கு வழங்குகின்றது.
எப்போதும் பச்சையாகவே காணப்படும் இந்த மரம் 5 மீட்டர் முதல் 18 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய இலைகள் தோன்றுகின்றன. குறுகிய காலத்தில் மீண்டும் பச்சை நிறத்திற்குத் திரும்பி விடுகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் பூக்களும், மழைக் காலங்களில் பழங்களும் தோன்றுகின்றன. தமிழகத்தில் வேறு பெயர்களாக மலை அத்தி, அசமந்தம், பேயந்தி எனவும் அழைக்கப்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
பழங்களைக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் நாக்கு மற்றும் தொண்டை நோய் குணம் பெறுகின்றன. இப்பழத்தின் சாறுகளைக் காயம், புண்கள் மீது பூசலாம். பழங்கள் ஜீரணத்தை உண்டாக்குகிறது. உடலுக்குக் குளிர்ச்சி தருகிறது. பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. பழங்களை உலர வைத்து பேதி, வாய்ப்புண் குணம் பெறச் சாப்பிடுவார்கள். பழச்சாறு வெட்டை நோய், உடலுறவு நோய்களைக் குணப்படுத்துகிறது.
இம்மரத்தின் பட்டையை சீதபேதி, ஜுரம் ஆகியவை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். மேலும் உடல் எரிச்சல், வீக்கங்கள், தோல் நோய்கள், சர்க்கரை நோய், இரத்தப்போக்கு நோய், காசநோய், கட்டிகள், இந்திரியக் கோளாறுகள், அரிப்பு, பெண் உடலுறவு உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.
மரப்பட்டையைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது தசைகளில் சுருக்கம் ஏற்பட்டு இரத்தக்கசிவு நின்றுவிடுகிறது. மரப்பட்டை பவுடரை தேங்காய் எண்ணெயில் கலந்து தோல் நோய்கள் மீது பூசுவார்கள். சிறுநீரக நோய்களிலும், புற்ற நோய்களிலும் இதைப் பயன்படுத்துவார்கள்.
இம்மரத்தின் பூக்கள் சிறுநீரைத் தாராளமாகப் பிரியச் செய்கிறது. சிறுநீர் பாதை எரிச்சல், புண், சீழ் குணம் பெறுகிறது. ஆண்மைக்கு வலிமை தருகிறது.
இதன் பழம், பட்டை, பால் ஆகியவை பயன்படுகின்றது. கைப்புச் சுவையுடன் கொண்ட இச்செடி உரமாக்கும் தன்மையும், முறை வெப்பமாதலும் செய்கையும் உள்ளன. இதன் பால் மேக நோய், சொறி, குஷ்டரோக தடிப்பு, முளைவிரணம் ஆகியவற்றைப் போக்கும்.
பட்டையைக் குடிநீரிட்டு 50 மில்லி வீதம் தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் முறை ஜுரத்தைப் போக்கும். பழத்தையும், பட்டையையும் வெந்நீரில் வேக வைத்து குளித்து வந்தால் படை நீங்கும்.
வேரிலிருந்து எடுக்கும் பால் சிறந்ததாகக் கூறப்படுகின்றது. கற்கண்டுடன் சேர்த்து தகுந்த அளவில் கொடுத்தால் மேற்படி நோய்கள் தீரும் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. காட்டு அத்தியின் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகியவற்றுக்கும் தனித்தனி குணம் உள்ளன.
இலை : பேதி, மாந்தம், இருமல், நஞ்சு ஆகியவற்றை நீக்குகிறது.
காய் : சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.
இலை, மொட்டு : இதனை பச்சையாகவோ, உலர்த்தியோ, தனித்தனியாகவோ வேறு சரக்குகளுடன் சேர்த்தோ குடிநீரிட்டு சீதபேதிக்கு கொடுத்தால் குணமாகும்.
பூ : சீதபேதியைப் போக்கி, புழுக்களைக் கொல்கிறது.
விதை : இதனை காடி விட்டரைத்து விஷக்கடிகளுக்கும், புண்களுக்கும் பயன்படுத்தலாம்.