நவதாண்யத்தின் – பயன்கள்
11 min readநெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.
பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.
சோளம்:- சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
கம்பு:- கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.
சாமை:- சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
வரகு:- நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
கேழ்வரகு:- தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.
இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
கோதுமை:- அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.
கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.
வாற்கோதுமை(பார்லி):- குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.