December 22, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

வெந்தயத்தில் என்ன இருக்கிறது?

12 min read

வெந்தயம்அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவக் காத்திருக்கிற அற்புத மருந்து வெந்தயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். சாம்பாரோ, வத்தக்குழம்போ, புளிக்குழம்போ… எதுவானாலும், தாளிக்கும்போது சிறிது வெந்தயம் தூக்கலாகச் சேர்த்துப் பாருங்கள். முழுதாக வெந்தயம் சாப்பிடப் பிடிக்காதவர்கள், கொதித்து இறக்கும் முன் வெந்தயப் பொடியைத் தூவிப் பாருங்கள்… உங்கள் சமையலறை வாசம், தெருக்கோடி வரை வீசும். மணத்தில் மட்டுமின்றி, குணத்திலும் மிகச் சிறந்தது வெந்தயம்!

வெந்தயத்தில் என்ன இருக்கிறது? (100 கிராமில்)

புரதம் 26.2 கிராம்
கொழுப்பு 5.8 கிராம்
நார்ச்சத்து 7.2 கிராம்
ஆற்றல் 333 கிலோ கலோரி

ஜீரணமாகாத மாவுச்சத்தைதான் நாம் நார்ச்சத்து என்கிறோம். அந்த நார்ச்சத்து வெந்தயத்தில் மிக அதிகம். தவிர பெக்டினும், பிசினும்கூட அதிகம். 100 கிராம் வெந்தயத்தில் 40 சதவிகிதம் பிசின் உள்ளது. அபரிமிதமான புரதமும், நார்ச்சத்தும் கொண்ட வெந்தயத்தின் மகிமை நமக்குத்தான் முழுமையாகத் தெரிவதில்லை. அதனால்தான், அதை சமையலில் ஏனோதானோவென, அதுவும் 
கொஞ்சமாகத்தான் உபயோகிக்கிறோம். வெந்தயத்தின் மகத்துவம் தெரிந்தால், சாப்பிடுகிற உணவிலிருந்து வெந்தயத்தை ஒதுக்கித் தள்ளும் பழக்கத்தை மாற்றிக் கொள்வீர்கள்!

வெந்தயம் நீரிழிவுக்காரர்களுக்கு மிக நல்லது என்பது தெரியும். ஏன் நல்லது எனத் தெரியுமா? சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 – 110 வரை இருக்க லாம். நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும். அதிக கலோரி உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது. 

அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது. தினமும் இரவில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதே போல புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கும்.

வெந்தயத்தில் உள்ள பிசின், குடலுக்குள் போய், தண்ணீரை எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பான்ஜ் போல விரிவடையும். அது உணவுக்குழாயில் உள்ள நச்சுப்பொருள்களை எல்லாம் வெளியேற்றிவிடும். எனவே, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. வெந்தயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். அது ‘அசிடிட்டி’ எனப்படுகிற அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும். உதாரணத்துக்கு எலுமிச்சை ஜூஸ் குடிக்கிறோம் என்றால், அதிலுள்ள அமிலத்தன்மையை ஈடுகட்ட, மோர் குடிக்க வேண்டும். 

உணவின் மூலம் உடலுக்குள் சேர்கிற அமில – காரத் தன்மைகளை பேலன்ஸ் செய்து சரியான அளவில் வைக்கக்கூடியது வெந்தயம். செரிமானம் சரியில்லாத நேரங்களில் வெந்தயம் கலந்த மோர் குடித்தால், அமிலத் தன்மை சரியாகி, செரிமானம் சீராகும். வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி இருந்தால் 10 கிராம் வெந்தயத்தை, மோரில் கலந்து சாப்பிட, உடனே குணம் தெரியும். வெந்தயம் வயிற்றுக்குள் போய், ஊறி, கெட்ட கிருமிகளை உறிஞ்சி, இன்ஃபெக்ஷனை சரியாக்கும். உடல் சூட்டினால் உண்டாகும் வலியையும் விரட்டும். 

வயிற்றில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருந்தாலும் வெந்தயம் வெளியேற்றி விடும். அமீபியாசிஸ் மாதிரியான நோய்களுக்கும் வெந்தயம் பிரமாதமான மருந்து. தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். சிறுநீரகங்கள் சீராக இயங்கும். வாயுத் தொந்தரவு நீங்கும். எலும்புகள் பலமாகும். சருமம் அழகு பெறும். வெந்தயத்தை வறுத்துப் பொடித்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும். மாதவிலக்கு நாள்களில் உண்டாகிற கோளாறுகளுக்கும் வெந்தயம் மருந்து. உடல் சூட்டைத் தணித்து, கர்ப்பப் பையைப் பலப்படுத்தும். மூல நோய்க்கும் நிவாரணம் தரும்.

Leave a Reply

Your email address will not be published.