புற்றுநோயை தடுக்கும் புராக்கோலி:
6 min read
புராக்கோலி என்ற மேலைநாட்டு காய்கறியானது இதயநோய் மற்றும் புற்றுநோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு சூப்பர் புராக்கோலியை கண்டறிந்துள்ளனர்.
இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறியாகும். முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு ப்ரூக்கோலி முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள தாதுஉப்புக்கள் உயர்ரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.
சூப்பர் புராக்கோலி:
நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் ஆய்வு செய்து ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் ‘குளூக்கோராபேனின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ள புதிய புராக்கோலியை உருவாக்கியுள்ளனர். இந்த ‘குளூக்கோராபேனின்’, இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
புற்றுநோயை கட்டுப்படுத்தும்:
இது வழக்கமான புராக்கோலியைப் போலவே இருக்கும். ஆனால் இந்த சூப்பர் புராக்கோலி, மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் குறைக்கிறது, புற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது, நோய்களை எதிர்த்துப் போராடும் `ஆன்டி ஆக்சிடன்ட்களை’ ஊக்குவிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதன்மூலம், நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளை மேலும் சத்து நிறைந்ததாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.